Sunday, November 15, 2009

உண்மை, பொய், மிகை, செய்தி

15 நவ 2009, ஞாயிற்றுக்கிழமை

"பத்திரிக்கையாளர்கள் உண்மையை எழுத வேண்டும். மிகைப் படுத்தக்கூடாது..." என்று சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் அதை குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு, சில குறிப்பிட்ட செய்திகளை அவர்கள் வெளியிட்டதற்காக அப்படி கூறியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும் சமீப காலமாக பத்திரிக்கைகள் மட்டும் அல்ல, அனைத்து ஊடகங்களும் மிகைப்படித்துதலை ஒரு கட்டாய சடங்காகவே கடைப்பிடித்து வருவதாகத்தான் தோன்றுகிறது.

அரசியல் செய்திகள் எனும் போது ஒவ்வொரு பத்திரிக்கை / தொலைக்காட்சி தாம் சார்ந்திருக்கும் அல்லது ஆதரிக்கும் கட்சிக்கு ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கில் செய்திகளை திரித்தும் மிகைப்படுத்தியும் வெளியிடுவது போன்றே தெரிகிறது.

அரசியல் செய்திகள் என்று இல்லை, சினிமா, வணிக செய்திகளும் இவ்வாறே இருக்கின்றன.

இந்த சூழலில், இந்த செய்திகளை பார்க்கின்ற, படிக்கின்ற பொது மக்கள், அந்த விசயங்களை கிரகிப்பதுடன், அதன் நம்பகத்தன்மையையும் அலசி ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது. எந்த செய்தியானாலும் எடுத்த எடுப்பில் அதை அப்படியே நம்பிவிட முடியவில்லை.

சில நேரங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியைவிட மிகைப்படுத்திய செய்தி அதிக எதிர்வினையை ஏற்படுத்திவிடுகிறது.

செய்திகளை வடிகட்டி ஒழுங்குபடுத்தி வெளியிட ஒரு அமைப்பை - official structure / hierarchy - கொண்டுள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி இவற்றில் இந்த நிலை என்றால், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுத முடிகிற ஊடகமான இண்டெர்நெட்டில்.....

உண்மை, பொய், மிகை என்ற வகைகளோடு இனி செய்தி என்ற ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்...

Friday, November 13, 2009

பதற வைகும் சாலை விதிமீறல்கள்

13 நவ 2009, வெள்ளிக்கிழமை

கோவை பீளமேடு அவினாசி ரோடு - பயனீர் மில் ரோடு சந்திப்பில் நான் கண்ட காட்சி. நேரம் மாலை சுமார் 4 மணி. அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒரு பெண் காவலர் (கான்ஸ்டபிள்) மிக கவனத்துடனும் பொறுப்புடனும் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். உற்சாகமாக துள்ளி குதித்து செல்லும் குழந்தைகளை கண்டிப்புடன் ஒழுங்கு செய்ததுடன், வாகனங்களையும் நல்ல முறையில் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, சில வாகன ஓட்டிகள் மிக வேகமாக ஒட்டியதை தட்டிக்கேட்டார். அந்த வாகனங்கள் வந்த வேகத்தை பார்த்த போது நானும் பதறித்தான் போனேன். குழந்தைகள் வருவதை / இருப்பதை பார்த்தும் வேகத்தை குறைக்காமல், சொல்லப்போனால் இன்னும் வேகத்தை கூட்டி சென்றனர். அதுவும் அடுத்த சந்திப்பில் வேறு பள்ளி குழந்தைகள் இருப்பதயும் பார்த்து! குறிப்பாக, லாரி, வேன், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் மிக அஜாக்கிரதையாக சென்றன.

அந்த வாகன ஒட்டிகளை அந்த பெண் காவலர் கடுமையாக கண்டித்தும், பலர் பொருட்படுத்தாமலேயே சென்றனர் - அவர் பெண் என்பதாலோ அல்லது சாதாரண காவலர் தான் என்பதாலோ - சிலர் நேருக்குநேர் ஏளனம் செய்து சென்றனர்.

அவருக்கு அது எரிச்சல் கூட்டியபோதும், தன் கடமையை சரியாகவே செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்து எனக்கு தோன்றுவது இது தான் - ஒரு வேளை அவர் சினிமா ஹீரோயிசத்துடன் அவர்களை அடித்து உதைத்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்குமோ? அல்லது அவரோ மற்ற பொறுப்பான காவலர்களோ உண்மையில் அப்படி செய்யத்தான் முடியுமா?

நான் பல வருடங்களாக இதே போன்ற காட்சிகளை இந்த பகுதியில் பார்க்கிறேன். விபத்துகள் பல நடந்தும், ஓட்டுநர்கள் திருந்தியபாடில்லை.

சாலை விதிகளை மீறும் இது போன்றவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? லைசன்ஸ் ரத்து செய்தாலோ, அபராதம் விதித்தாலோ, சிறையிலடைத்தாலோ போதுமா? இல்லை சில மத்திய ஆசிய நாடுகளில் உள்ளதாக கேள்விப்படுகிறோமே - Corporal Punishment - அது போன்று மாறு கால் மாறு கை வெட்டி வீசிவிடுவோமா?